தமிழ்நாடு

மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து இருக்கும் கல்லணை.

கல்லணை நாளை திறப்பு : தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி

Published On 2023-06-15 05:10 GMT   |   Update On 2023-06-15 05:10 GMT
  • மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
  • காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.

பூதலூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .

நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.

திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News