தமிழ்நாடு

எண்ணெய் கழிவு பாதிப்பு- பைபர் படகில் சென்று பார்வையிட்டார் கமல்ஹாசன்

Published On 2023-12-17 03:37 GMT   |   Update On 2023-12-17 03:48 GMT
  • எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை அவர் பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், " இங்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தைவிட பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறிகுறியும் இங்கு இல்லை.

எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கொருவர் பழி போட்டு வருகின்றனர்.

எண்ணெய் கழிவு பாதிப்பு பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் அச்சம் ஏற்படும்.

இது மீனவர்களின் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News