தமிழ்நாடு

நகை வியாபாரியிடம் பட்டாக்கத்தி முனையில் 75 பவுன் தங்கம்-7 கிலோ வெள்ளி கொள்ளை

Published On 2024-05-21 04:45 GMT   |   Update On 2024-05-21 04:45 GMT
  • கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர்

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விலக்கு சுந்தரம் செட்டியார் தெருவில் வசிப்பவர் சரவணன். நகை வியாபாரியான இவர் சென்னையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு பேருந்தில் செல்லும் அவர் ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசில சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் சரவணன் தனியாகவே சென்னைக்கு சென்று வருவார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை சென்ற சரவணன் சவுகார்பேட்டை பகுதியில் 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளிக் கட்டியை வாங்கிக் கொண்டு நேற்று இரவு அரசு பேருந்தில் காரைக்குடி புறப்பட்டார். பேருந்தில் தூங்கியபோதும், நகைகளை தனது கைப் பைக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

இன்று அதிகாலை சரவணன் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து ஐந்து விலக்கு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்த சென்று கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் முதல் அந்த பகுதியில் தொடர்ந்து விடிய, விடிய அடை மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அப்போது சரவணனை பின் தொடர்ந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்தன. இதனை கவனித்த சரவணன் சாலையோரமாக நடந்து சென்றார். திடீரென அந்த வாகனங்களில் வந்த 6 பேரும் சரவணனை வழிமறித்து சுற்றி வளைத்தனர். ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கைகளில் பட்டாக்கத்தி வைத்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சரவணன் அவர்கள் பிடியில் இருந்து தப்பியோட முயன்று வேகமாக நடந்தார்.

ஆனாலும் அவர்கள் சரவணனை கீழே தள்ளியதோடு பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை மற்றும் வெள்ளிக்கட்டிகளை பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த 6 பேரும் எந்தவித சலனமும் இன்றி அங்கிருந்து தப்பிச்சென்றனர். நகைகளை பறிகொடுத்த சரவணன் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவருக்கு உதவ யாரும் வரவில்லை.

இதைத்தொடர்ந்து சரவணன் காரைக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சரவணனுடன் விரைந்து சென்று அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. சரவணன் சென்னைக்கு நகைகள் வாங்க சென்றுவிட்டு நள்ளிரவு அல்லது அதிகாலையில் வருவதை தொடர்ந்து நோட்டமிட்ட மர்ம நபர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காரைக்குடியில் இன்று அதிகாலை நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News