மெரினா கடற்கரை நினைவிடத்தில் கருணாநிதி அருங்காட்சியகம் சுரங்க அறையுடன் உருவாகிறது
- பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
- கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் விசாலமான பாலம் கட்டப்படுகிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது.
இந்த பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நேற்று நடைபெற்றது.
இந்த பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது சிந்தனைகள் எழுத்தோவியங்கள், இலக்கியம், கதை வசனம், அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நவீன ஒளி படங்களும் அருங்காட்சியகமாக அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது.
2 ஆயிரம் சதுர மீட்டர் பரபரப்பளவில் சுரங்க அறையுடன் உருவாகும் இந்த கண்காட்சி ரூ.80 லட்சம் செலவில் கட்ட பரிந்துரைக்கப்பட்டடு உள்ளது.
ஆரம்பத்தில் 40 சென்ட் நிலத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது அதை 160 சென்ட் நிலத்தில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
நினைவிடத்தின் ஒரு பகுதியில் நூலகங்கள், டிஜிட்டல் முறையிலான காட்சியங்கள், ஒலி-ஒளி அமைப்புகள், வண்ண ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற உள்ளன.
கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் விசாலமான பாலம் கட்டப்படுகிறது.
இதற்காக கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்து உள்ளனர்.
பாலத்தின் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டர், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படுகிறது. கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பினாலான இந்த கண்ணாடி பாலம் அமைய உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
தமிழ் மொழியையும் தமிழகத்தையும் போற்றும் வாசகங்கள் பிரதிபலிக்கும் வகையில் லேசர் விளக்குகளை பொருத்தவும் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நினைவிடங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு கருணாநிதியின் நினைவிட பகுதிகள் மிகவும் அழகுடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.