முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு
- கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
- அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கூடலூர்:
கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
ஆனால் அதனைத் தொடர்ந்து சாரல் மழை மட்டுமே பெய்து வந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
பருவமழை தீவிரம் அடைந்ததால் 2001 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3579 கன அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் 117.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 118.55 அடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்ததால் 119.90 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையில் இருந்து நீர் திறப்பு 878 கன அடியில் இருந்து 967 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 87 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.87 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 556 கன அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.32 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 74.8, தேக்கடி 53.4, கூடலூர் 7.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 5.8, போடி 1.2, வைகை அணை 0.2, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1, வீரபாண்டி 17, அரண்மனைப்புதூர் 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.