தமிழ்நாடு (Tamil Nadu)

கொடநாடு வழக்கு- மதுரை டெக்ஸ்டைல் அதிபரிடம் விசாரணை

Published On 2022-07-13 07:34 GMT   |   Update On 2022-07-13 07:34 GMT
  • கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை லாஜிவோரா விசாரணைக்கு ஆஜரானார்.
  • சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

கோவை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

நேற்று 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு தனிப்படை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து இன்று காலை கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் லாஜிவோரா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அதனை பதிவு செய்து கொண்டனர்.

சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

மேலும், இவருக்கு மதுரையில் சொந்தமாக ஒரு மால் ஒன்று உள்ளது. இந்த மாலை சசிகலாவுக்கு ரூ.50 கோடிக்கு விற்க இருந்ததாகவும், அது தொடர்பாக அவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே போலீசார் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Tags:    

Similar News