கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஓ.பி.எஸ்-டி.டி.வி. தினகரன் தேனியில் கூட்டாக ஆர்ப்பாட்டம்
- பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
- தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.