தமிழ்நாடு

எந்தவித சந்தேகத்துக்கும் தேர்தல் ஆணையம் வழிவகுக்க கூடாது: எல்.முருகன்

Published On 2024-04-28 08:18 GMT   |   Update On 2024-04-28 08:18 GMT
  • தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது.
  • வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள்.

கோவை:

மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கேமரா காட்சிகள் நேற்று திரையில் தெரியாமல் போய் உள்ளது. அதற்கு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முறையான பணியாக இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெரியாமல் போனதற்கு காரணம் கால சூழ்நிலை, கடும் வெயில் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அடிக்கும் வெயிலை போன்று ஊட்டியில் வெயில் தாக்கம் இருப்பதில்லை. எனவே எதாவது காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக தொழில்நுட்பத்தை சரிசெய்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையான பணி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் வாக்குகள் எல்லாமே விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்சென்னை என தமிழகம் முழுவதுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.

வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் விளக்கி உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சியினரும் இதனை கையில் எடுத்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் மக்களின் ஒவ்வொருவரின் எண்ணம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவு இன்று நிறைவேறி உள்ளது. அனைவரும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி அங்கு செல்லவில்லை என்பது அவர் ராமரை வெறுக்கிறாரா, அல்லது கடவுளை வெறுக்கிறாரா அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News