கடந்த ஆண்டை விட 3 கோடி பேர் அதிகமாக மெட்ரோ ரெயிலில் பயணம்
- இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
- வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.