தமிழ்நாடு

முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சம் பழம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்துக்கு ஏலம்

Published On 2024-03-26 04:15 GMT   |   Update On 2024-03-26 04:15 GMT
  • திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
  • நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.

நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.

இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. 

Tags:    

Similar News