தமிழ்நாடு

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை படத்தில் காணலாம். 

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி

Published On 2023-07-21 04:07 GMT   |   Update On 2023-07-21 04:07 GMT
  • கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
  • ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுகுய்யனூர் பிரிவு உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் புதுகுய்யனூர் பிரிவு அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. புதர்களால் நிறைந்து கிடக்கும் இந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லை.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அந்த பகுதியாக வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. சுமார் 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது சிறுத்தை கிணற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து புதுப்பீர்கடவு, ராஜன்நகர், பண்ணாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.

பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருவதால், வனத்துறையினர் அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை கடும் சீற்றத்துடன் உள்ளது. எனவே மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிணற்றில் கரடி ஒன்று விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி அதனை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News