ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள்: அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்
- 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
- சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள சென்னியப்பன் காட்டு பாறை என்ற பகுதியில் 2 சிறுத்தைகள் நாயை துரத்தி கொண்டு வந்ததாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டதும் 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் வனச்சரக அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் சேவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து சோளக்காட்டில் சில காலடித்தடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் திரளாக கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு இதே பகுதியின் அருகில் உள்ள பாப்பாங்குளத்தில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பெண் கூறிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.