உள்ளாட்சி தேர்தலில் இடம் பிடிக்க போட்டி போடும் காங்கிரஸ்
- தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
- சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
அதற்குள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுக் குழுவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உசுப்பி விட்டார்.
அதை கேட்டதும் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சூடாகி விட்டார்கள். தி.மு.க. தயவால்தான் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அந்த நன்றியை மறந்து விடக்கூடாது என்றார்கள். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏன் இந்த திடீர் ஊடல்? என்பது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
இதை தி.மு.க.வுடன் ஊடல் என்பதை விட எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஊடல் என்பது தான் சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் மனக்குமுறல்தான் இது.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 96 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 34 இடங்களை பிடித்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தும் காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடத்தியது. அப்போதும் ஆட்சியில் பங்கு தரவில்லை.
இப்போதும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எங்கள் பலத்தையும் சேர்த்துதான் தி.மு.க. வென்றது. இப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.
எந்த மாவட்டத்திலும் எந்த மட்டத்திலும் காங்கிரசாருக்கு உரிய மரியாதையை தி.மு.க.வினர் தரவில்லை.
ஆட்சியில் பங்கு கேட்காவிட்டாலும் 10 வாாரியங்களில் பொறுப்பு தர கேட்டோம். அதிலும் காங்கிரசாரை கண்டு கொள்ளவில்லை.
உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பங்கீடு கிடைக்க வில்லை. கட்சி மேலிடம் முடிவு செய்யாமல் மாவட்ட அளவில் பேசி முடிக்கும்படி கூறி விட்டார்கள். ஆனால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எங்களை மதிக்கவில்லை. கொடுத்த இடங்களில் கூட போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசாரை தோற்கடித்தார்கள். இப்படி இருந்தால் காங்கிரசை வளர்ப்பது எப்படி?
கட்சியை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் ஒரு கட்டத்தில் காங்கிரசை காண முடியாது. எனவேதான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி சிலருக்கு கிடைத்து விட்டதால் கட்சி பலவீனப்பட்டு போவதை தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதுதான் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் 10 வாரியங்கள் கேட்டதில் பீட்டர் அல்போன்சுக்கு மட்டும் தி.மு.க. தன்னிச்சையாக பதவி கொடுத்தது. அறங்காவலர் பதவிகள் கேட்டோம். தரவில்லை. அரசு வக்கீல்கள் பதவி தரவில்லை. வாரிய தலைவர்கள் பதவி விரைவில் முடிய இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வரப்போகிறது.
தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் பதவிகள் எதையும் நாங்கள் கேட்கவில்லை. சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.
வரப்போகும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், காலியாக போகும் வாரிய தலைவர்கள் பதவியிலும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் முரண்டு பிடிப்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.