பூட்டப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க வேண்டும்- தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு
- தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.
- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.
தேர்தல் அட்டவணை வெளியான மார்ச் 16-ந்தேதி முதல் மாவட்ட கலெக்ர்கள் இவற்றை பூட்ட உத்தரவிட்டனர். அதன்படி இன்னும் இந்த அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிடக்கிறது. நகராட்சித் தலைவர் அலுவலகம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலுவலகங்களும் பூட்டியே கிடக்கிறது.
தற்போது தேர்தல் முடிந்து 1 வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்றுவதற்காக எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறந்து விட வேண்டும் என்று 234 தொகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.