தமிழ்நாடு

தண்ணீரிலோ... தரையிலோ... எங்குமே போகக் கூடாது- போலீசாரின் கேள்விகளால் பா.ஜ.கவினர் திணறல்

Published On 2024-02-15 10:20 GMT   |   Update On 2024-02-15 10:20 GMT
  • 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று வருகிறார்.

200-வது தொகுதியாக துறைமுகம் தொகுதியில் கடந்த 11-ந்தேதி அண்ணாமலை நடை பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடை பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடை பயணம் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

தரைப்பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாதே என்று நினைத்து பா.ஜனதா மீனவர் அணி சார்பில் இன்று நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸ் அனுமதிக்காக அணுகி இருக்கிறார்கள். உடனே போலீஸ் தரப்பில் எத்தனை படகுகள் கலந்து கொள்கிறது என்று கேட்டுள்ளார்கள்.

300 என்றதும், 100 ஆக குறைத்து கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அதனால் பரவாயில்லை. இனி பிரச்சினை இல்லை என்று கருதி 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் போலீஸ் தரப்பில் இருந்து 8 கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைத்தனர்.

* எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?

* யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டதா? பதிவு எண் என்ன?

* யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதித்துள்ளதா?

* கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?

* கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

* யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?

* பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?

* விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?

கேள்விகளை பார்த்து மீனவர்கள் மயங்கி விழாத குறைதான். மீனவர்களிடம் நீந்த தெரியுமா? என்று கேட்டால் யாரிடம் போய் சான்றிதழ் வாங்க முடியும். படகுகளின் பதிவு எண்ணை கொடுத்தால் மானியம் ரத்தாகி விடுமோ என்ற பயம். மொத்தத்தில் தரையிலோ? தண்ணீரிலோ? எங்கும் யாத்திரை நடத்த தடைதான் போங்கள் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

இதையடுத்து இன்று நடைபெற இருந்த கடல் தாமரை யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

Tags:    

Similar News