சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவு தங்க அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை மறுப்பு
- உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும்.
- வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலைக்கு மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர்.
எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வக்கீல் ஆஜராகி, மலைக்கோவிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.
வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.