பராமரிப்பு பணிகள்: ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தி.நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
- தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்து செல்லும் 750 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மி.மீ. விட்டமுள்ள உந்து குழாயை இணைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஸ்டெர்லிங் சாலையில் 31-ந் தேதி மாலை 7 மணி முதல் 1-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இந்த பணிகள் நடைபெறுவதால் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வராது. எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.