தமிழ்நாடு

அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலி- வனத்துறையினர் விசாரணை

Published On 2023-07-26 05:03 GMT   |   Update On 2023-07-26 05:03 GMT
  • பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது.

உடனடியாக பவானிசாகர் வனச்சரகர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த புலியை நேரில் ஆய்வு செய்து மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து புலியை பிரேத பரிசோதனை செய்து புலியின் குடல் மற்றும் இரைப்பையை பெங்களூரு மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை. ஆய்வு முடிவு வந்த பிறகு தான் புலி எவ்வாறு இறந்தது என தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புலி உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் புலி இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என கூறினர்.

Tags:    

Similar News