தனது மகளுக்கு மட்டும் திருமணம்.. மற்ற பெண்களுக்கு சந்நியாசம்? - சத்குருவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
- ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும்
- அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவையில் ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் பெண்கள் சந்நியாசம் மேற்கொள்ள மூளைச்சலவை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு ஈஷா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரக் கோரி கோவை வேளாண் பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்குதல் செய்திருந்தனர்.
இந்த மனு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஆஜரான காமராஜின் பெண்கள் இருவரும் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் உள்ளதாகக் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவரை வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில் ஆக்கிய ஜக்கி வாசுதேவ் மற்ற இளம் பெண்களின் தலையை மொட்டையடித்துக்கொள்ள ஊக்குவிப்பது ஏன்? அவர் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் துறவியாகத் தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மனுதாரரின் வழக்கறிஞர் பேசுகையில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.