குடிநீர் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டிய விவகாரம்- பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை
- 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
- ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை அய்யப்பன் தாங்கல் ஆயில் மில் சாலையில் காலி நிலம் உள்ளது. இது கிருஷ்ணாநதி நீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும். இங்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேங்கும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. 450 தெருக்களில் இருந்து 12.5 டன் குப்பைகள் இந்த நிலத்தில் கொட்டப்பட்டன.
இதனால் இந்த இடம் சுகாதார சீர்கேடாக மாறி யது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்ப வர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அய்யப்பன் தாங்கல் மட்டுமின்றி குன்றத்தூர் பஞ்சாயத்து எல்லைக்கு உள்ளிட்ட கெருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளி லும் இதேபோன்று குப்பைகள் கொட்டும் பிரச்சினைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்காக உள்ளாட்சி அமைப்பு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் ஆயில்மில் சாலையில் கொட்டப்பட்ட 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
இதையடுத்து இங்கு 90 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "ஆயில்மில் சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாலும், தற்போது அதற்கு இணையாக உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலமும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்றனர்.