தமிழ்நாடு

சீர்காழி சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிட பணி விரைவில் முடிக்கப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2024-06-28 06:47 GMT   |   Update On 2024-06-28 06:47 GMT
  • 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
  • தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்ட பின்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

சென்னை:

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

பதிவுத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடங்களில் செயல்படும் 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனை செயல்படுத்தும் விதமாக, பதிவுத்துறை தொடங்கிய 1865-ம் ஆண்டு முதல் 150 ஆண்டுகளாக பழமையான கட்டிடத்தில் செயல்படும் சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 28.6.2023 அன்று 1.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிட்டடம் கட்டும் பணிகள் 5.2.2024 அன்று தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உடனடியாக புதிய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், பதிவு கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக முதலமைச்சரால் கடந்த 21.7.2023 அன்று 1.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஆவணப் பதிவிற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியான, தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்ட பின்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News