வரும் 22-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
- முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
- இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 430 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கவுன்சிலிங் இந்த மாதம் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை நடைபெறும்.
2-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும்.
3-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆண்டு கூடுதலாக 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதிதாக 2 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதாவது இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்கள் உள்ளன.
3 கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகும் காலி யிடங்கள் இருந்தால் மேலும் ஒரு கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு காலி இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
செப்டம்பர் 15-ந் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்கும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு வேறு கல்லூரிக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கட்டிய முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.