மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் இனிமேல் நீட்டிக்கப்பட மாட்டாது- அமைச்சர் செந்தில்பாலாஜி
- தமிழகத்தில் இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கரூர்:
தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதாவது தமிழ்நாடு முழுக்க அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் குறித்து உரிய தரவுகள் இல்லாததால் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியது.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும் ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்றன. முதலில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே பிப்ரவரி 15-ந்தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பிப்ரவரி 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்ட போதிலும், இன்னும் சிலர் இணைக்காமல் இருந்தனர்.
இன்றே ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆதாரை மின் இணைப்பை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் மார்ச் 4-ந்தேதி நடைபெறும் அரசு விழாவில் ரூ.267 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 12 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இதுவரை தமிழகத்தில் 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகளை இணைக்க வேண்டிய உள்ளது. இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது. எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறுகிய காலத்தில் 2.66 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.
சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.