தமிழ்நாடு (Tamil Nadu)

மின்நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

Published On 2024-10-05 06:31 GMT   |   Update On 2024-10-05 06:32 GMT
  • மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை.
  • மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார்.

மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்து உள்ளது. மின் விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 94987 94987-ல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags:    

Similar News