தமிழ்நாடு (Tamil Nadu)

அறிவிக்கப்படாத முதல்வராக வலம் வரும் உதயநிதி- ஆர்.பி. உதயகுமார்

Published On 2024-09-14 05:45 GMT   |   Update On 2024-09-14 05:45 GMT
  • அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.
  • உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.

மதுரை:

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் கூறியதாவது:-

தமிழக இளைஞர் நலம் விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு திட்ட செயலாக்குத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரையில் கடந்த 9-ந்தேதிஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே அமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அரசு செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டிருந்தது .

குறிப்பாக இதுபோன்ற ஆய்வு கூட்டத்திலே மனுக்களின் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே அலுவலர் அவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிப்பது என்பது ஏற்புடையதாகாது.

இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சி திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் என்ற பெயரிலே அவர்களுடைய மரபுகளை மீறி அனைத்து துறைகளுடைய அலுவலகங்களிலும் அவர் ஆய்வு செய்வதாக அரசு ஊழியர் சங்கத்தினர் முகம் சுளிக்கின்றனர். பொதுவாக அனைத்து துறைகளுடைய அலுவலர்கள் ஆய்வு செய்கின்ற அந்த அதிகாரம் என்பது நாம் அறிந்த வகையிலே முதலமைச்சர் மட்டும்தான் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரம் பெற்றவராக உள்ளார் என்பதை நாம் அறிகின்றோம்.

உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் எல்லாம் அமைச்சரவையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் அவரை முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.

முதலமைச்சருக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் விளையாட்டு துறை அமைச்சரின் கீழே கொண்டு வருவது என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கண்டிராத கேட்கிறாத பார்த்திராத ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.

அதோடு தன் ஆய்வுகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரிலே அவசரக்கதியிலேயே முழுமையான விசாரணை செய்யாமல் போதிய விளக்கத்தை பெறாமல் நடவடிக்கை எடுப்பது என்பது முழுக்க முழுக்க ஒரு அரை வேக்காட்டுத்தனமான நடவடிக்கையாக தான் அரசு ஊழியர்கள் பார்க்கிறார்கள்.

ஆகவே இன்றைக்கு முதலமைச்சராக அமெரிக்காவில் இருக்கின்ற போது அறிவிக்கப்படாத முதலமைச்சராக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் அரசின் முழு நிர்வாகத்தையும் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.

எது எப்படி ஆயினும் கலெக்டர் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக மதுரையிலே வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இது போன்ற மரபு மீறி நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தடுத்து நிறுத்தி ஒரு தவறான முன்உதாரணம் அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தி விட கூடாது என்பதை உரிய விளக்கத்தோடு இதற்கு ஒரு தீர்வு காண அமெரிக்காவில் இருக்கின்ற முதலமைச்சர் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News