கதறி அழுத மூதாட்டியின் கண்களை துடைத்த அமைச்சர்: மற்றொரு மூதாட்டிக்கு நிதியுதவி வழங்கினார்
- மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
- சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.
அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.
மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.