வாக்கு சதவீதம் குறைவாக உள்ள 160 தொகுதிகளில் கூடுதல் கவனம்- பா.ஜனதாவின் புதிய வியூகம்
- 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா கட்சி இந்த தடவை 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது. இதற்காக மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் தீவிரமாக பா.ஜ.க. தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்து 160 தொகுதிகளில் பா.ஜனதா மிக மிக பலவீனமாக இருப்பதாக பா.ஜனதாவினர் அறிந்துள்ளனர். எனவே அந்த 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 55 சதவீதம் வாக்குகளை பெற்றால் மட்டுமே 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற முடியும். இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 10 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் தென்னிந்தியாவில் உள்ளன. அந்த 160 தொகுதிகளையும் 7 மண்டலங்களாக பிரித்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் அதிகளவில் தென் மாநிலங்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 சதவீத வாக்குகளை கூடுதலாக பெறுவதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக வருகிற 22-ந் தேதி அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பா.ஜனதா ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள் பற்றி துண்டு பிரசுரங்களை நாடு முழு வதும் வீடுதோறும் கொடுப்பதை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி கோவில் விழாவுக்கு பிறகு ஜனவரி கடைசி வாரம் முதல் பா.ஜக. தலைவர்களின் நாடு தழுவிய பிரசாரம் தொடங்க இருப்பதாகவும் டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.