எண்ணெய் கழிவில் மூழ்கி 50-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிருக்கு போராடும் பரிதாபம்
- எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது.
- எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை.
சென்னை:
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் புயல் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக எண்ணூர் முகத்துவார பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் தேங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளன.
கடந்த 10-ந் தேதி முதல் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த பணிகள் முடிவுக்கு வந்து உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சுற்றுச் சூழல் துணை செயலாளர் சுப்ரியா சாகு, எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் தேங்கிய பகுதிகளை நேற்று பார்வையிட்டார். பின்னர் ரெட்டுக்குப்பம் பகுதியில் நடை பெற்ற ஆய்வுக் கூட் டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் சுப்ரியா சாகு இதை தொடர்ந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எண்ணூர் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் 4 பகுதிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியை உள்ளூர் மீனவ மக்களின் துணையுடன் சுமார் 900 பேர் மேற்கொண்டனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான மாநில குழுவினர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றது.
128 படகுகள், 7 ஜே.சி.பி., 2 டிராக்டர்கள், 8 கல்லி சக்கர்ஸ், 6 பொக்லைன்கள், 3 ஹைட்ராக்ரான்கள், 4 பிக்கப் டிரக்குகள், 8 ஆயில் பூமர்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர்கள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக 105.82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393.5 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இப்படி எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சுற்றுச் சூழல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி மீனவர்கள் தாங்கள் பயன்படுத்தும் முகத்துவார பகுதிகளில் சிறிய அளவில் தேங்கி காணப்படும் எண்ணெய் கழிவுகளை தொடர்ந்து தாங்களாகவே அகற்றி வருகிறார்கள்.
எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது. எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பெலிக்கான் பறவைகள் ஏராளமாக காணப்படும். இவைகள் தவிர மேலும் பல்வேறு வகையான பறவை இனங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
எண்ணூர் முகத்துவார பகுதியில் உள்ள அவை யாத்தி காடுகள் மற்றும் பறவையினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறையினரும், பறவைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வின் போது அவர்கள் கண்ட காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெள்ளை வெளேர் என காட்சி அளிக்கும் பெலிக் கான் பறவைகள் உள்பட பல்வேறு பறவை இனங்கள் தங்களது தோற்றத்தை இழந்து எண்ணெய் தோய்ந்த உடலுடன் பொலிவிழந்து காணப்பட்டன.
இதே போன்று 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறையினரும், சுற்றுச்சூழல் துறையினரும் கண்டறிந்து உள்ளனர்.
பறவைகளின் உடலில் ஒட்டியுள்ள எண்ணெய் கழிவுகள் 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டதால் உடலோடு உடலாக ஒட்டி காணப்படுகிறது. இப்படி எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை. தாழ்வாகவே பறந்து செல்கின்றன.
எண்ணூர் முகத்துவார பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவுகளால் ஏராளமான மீனவர்களும், கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிந்தன.
இப்படி விஷமாகிப் போன மீன்களை ஏதும் அறியாத பறவை இனங்கள் சாப்பிட்டுள்ளன. பின்னர் அந்த மீன் உணவுகள் ஒத்துப் போகாமல் பறவைகள் வாந்தியும் எடுத்துள்ளன. இந்த காட்சிகளையும் வனத் துறையினர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எண்ணெய் கழிவுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, விஷமாகிப் போன மீன்களால் உடல்நிலை பாதிப்பு என பறவை இனங்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அவை யாத்தி காடுகளில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.