தமிழ்நாடு
லாரியை வழிமறித்து கரும்புகளை ருசித்த யானைகள்

ஆசனூர் அருகே லாரியில் கரும்பை ருசித்த யானையை செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்

Published On 2022-07-15 06:24 GMT   |   Update On 2022-07-15 06:24 GMT
  • தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது.
  • வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிப்பதும், விரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதே போல் கடந்த சில நாட்களாக கரும்புகளை ருசிக்க யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. கரும்புகளின் வாசனையால் அந்த லாரியை யானைகள் திடீரென வழி மறித்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த கரும்புகளை பிடுங்கி ருசித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து அங்கேயே உலாவி கொண்டு இருந்தது.

இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர். வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்தனர். நீண்ட நேரம் சாலையை வழி மறித்த யானை கூட்டம் தானாக வனப்பகுதியில் சென்றது.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News