எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.
கரூர்:
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீண் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.
இதையடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் போலியான 'நான்டிரேசபிள்' சான்றிதழ் கொடுத்து உடந்தையாக இருந்ததாக கூறி சென்னை வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.
அதில் தன்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து வாங்கல் போலீசார் திருச்சி வந்து சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ததாக குறிப்பாணை கடிதத்தில் கையெழுத்து பெற்றனர்.