நில மோசடி வழக்கில் ஜாமீனில் வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மீது தாக்குதல்
- கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது.
கரூர்:
22 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நிபந்தனை அடிப்படையில் கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பிரவீன் கரூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பிரவீனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வக்கீலுமான கரிகாலன் கூறுகையில், பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது. கரூர்-கோவை சாலையில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பிரவீனை தாக்கி விட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசாரிடம் வழங்கியுள்ளோம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.