தமிழ்நாடு (Tamil Nadu)

மர்ம விலங்கு கடித்து இறந்த கன்றுக்குட்டி மற்றும் கோழியை காணலாம்.

கன்றுக்குட்டி, கோழிகளை கடித்துக்கொன்ற மர்ம விலங்கு- விவசாயிகள் பீதி

Published On 2024-05-29 05:39 GMT   |   Update On 2024-05-29 05:39 GMT
  • கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது.
  • டந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம், 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). விவசாயி. இவர் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

மாடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவரது மாடு ஒன்று கிடாரி கன்றுக்குட்டி ஒன்றை ஈன்று இருந்தது.

இந்நிலையில் இன்று காலை எழுந்த கிருஷ்ணசாமி கால்நடைகளை தீவனம் வைக்க வந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த பிறந்த 20 நாட்களே ஆன கிடாரி கன்றுக்குட்டியை மர்ம விலங்கு கடித்துக்கொன்றது தெரிய வந்தது.

இதுபோல் அருகே கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது. கன்றுக்குட்டியின் பாதி உடலையும், கோழிகளின் பாதி உடலையும் அந்த மர்ம விலங்கு கடித்து தின்று உள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏதும் மர்ம விலங்கு கால் தடங்கல் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் கிருஷ்ணசாமி வீட்டுக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

பின்னர் வனத்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த மர்ம விலங்கு நாய்கள் என தெரிய வந்தது. தற்போதும் மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் இறந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News