தருமபுரி அருகே வீடு புகுந்து வாலிபரை தாக்கிய மர்ம கும்பல்: போலீசார் குவிப்பு
- ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
- ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் அருந்ததியர் காலனியில் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து அங்கு வசித்து வந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 5 நபர்களும் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர்.
அதில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜகுமாரி வெட்ட சென்றபோது அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கூச்சலிடவே ஆட்டுக்காரன்பட்டி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அதற்குள் ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட ராஜ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் தொவரந்தொட்டி, பகுதியைச் சார்ந்த தெரிந்த நபர்கள் 5 பேர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஆட்டுக்கார பட்டியில் ஆதி திராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக ஒதுக்கிய நிலம் சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பகுதிக்குள் புகுந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.