தமிழ்நாடு

கேரளாவில் மாயமான பாதிரியார் கம்பத்தில் எரித்துக் கொலை?

Published On 2024-01-13 05:09 GMT   |   Update On 2024-01-13 05:09 GMT
  • உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
  • எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கம்பம்:

தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த ஆப்ரகாம் (வயது 55) என தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 4 நாட்களாக அவர் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். தேவாலயத்துக்கும் அவர் வராமல் இருந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மந்திப்பாறை பகுதியில் எரிந்து கிடந்தது மாயமான பாதிரியார் என உறுதியானது.

அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்துகிடந்த பாதிரியாருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News