தேசிய நல்லாசிரியர் விருது மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது: ஆசிரியை நெகிழ்ச்சி
- விருது சிறப்பான முறையில் பணியாற்ற உற்சாகத்தை அளித்துள்ளது.
- ஆசிரியர்கள் இணையதளம் மூலம் புதியனவற்றை கற்றுக்கொண்டு கற்பித்தால் மாணவர்களின் திறன் மேம்படும்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மாலதி. இவர், சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கற்றல்-கற்பித்தலில் மாணவர்களுக்கு புதுமையாக கற்பித்தல், வில்லுப்பாட்டு, நடனம் மூலம் கற்பித்தல் என இவர் கடுமையான பாடங்களையும் எளிமையான வகையில் கற்றுக்கொடுத்து வருகிறார்.
இவரின் சேவையை பாராட்டி கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை இவருக்கு வழங்கியது. தொடர்ந்து இவரின் சேவையை பாராட்டி இந்த ஆண்டு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு பரிந்துரைத்த இந்த விருது எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. சிறப்பான முறையில் பணியாற்ற உற்சாகத்தையும் அளித்துள்ளது.
ஆசிரியர்கள் இணையதளம் மூலம் புதியனவற்றை கற்றுக்கொண்டு கற்பித்தால் மாணவர்களின் திறன் மேம்படும். அதன் மூலம் என்னைப் போன்று மற்றவர்களும் சாதிக்கலாம் என்று கூறினார்.
தொடர்ந்து தேசிய நல்லாசிரியர் மாலதியை சக ஆசிரியர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரிலும், போனிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.