வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்- நயன்தாரா மீது நடவடிக்கை பாய்கிறது
- திருமணமான 4 மாதத்தில் குழந்தையா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
- வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியமில்லை.
சென்னை:
நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறி விட்டது.
நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. ஆறு ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கள் திருமணத்தையும் நடத்தினார்கள்.
திருமணமான நாலே மாதத்தில் அதே 9-ந்தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தனர். பிஞ்சு குழந்தையின் கால்களை மட்டும் இருவரும் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு 2 குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என்றனர்.
திருமணமான 4 மாதத்தில் குழந்தையா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு வேளை திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்திருப்பார். அதனால் அவசர அவசரமாக திருமணம் செய்திருப்பாரோ என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து உண்மைமையை கசியவிட்டனர். அதாவது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது.
இத்துடன் பிரச்சினை முடிந்தது என்று கருதிய நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு அதன்பிறகு தான் பிரச்சினையே தொடங்கியது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியமில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளையும் அதற்கான சட்டத்தையும் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது.
எந்த சூழலில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
* திருமணமான பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாமல் இருந்தால்.
* கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருந்தால்.
* கேன்சர் போன்ற நோய்களால் கர்ப்பப்பை அகற்றப்பட்டிருந்தால்.
* தெரியாத காரணங்களால் கரு பலமுறை தங்காத சூழ்நிலை.
* இயற்கையாகவே கரு தங்கும் தன்மை இல்லாமல் பலமுறை கலைந்து போதல்.
* கருவை சுமந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டால்.
* இப்படிப்பட்ட ஏதாவது காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகை தாயை நாட முடியும்.
இந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை மத்திய அரசின் பிரத்தியேக கவுன்சிலில் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் நிபுணர், கருவை 56 நாட்கள் வரை வெளியில் வைத்து பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ நிபுணர், ஒரு கவுன்சிலர் ஆகியோர் கட்டாயம் இருக்க வேண்டும்.
வாடகை தாய்க்கு 36 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். 56 நாட்கள் உருவான கருவை வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டும்.
இந்த சட்டத்தை மீறும் தம்பதிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாடகை தாயை கண்காணித்து வரும் மருத்துவமனைகள் கரு உருவான முதல் மாதத்தில் இருந்தே மாதந்தோறும் பரிசோதித்து வர வேண்டும். அதற்காக 'பிக்மி' வரிசை எண்ணும் வழங்க வேண்டும்.
இந்த எண் இருந்தால் தான் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கூட பெற முடியும்.
இவ்வளவு நடைமுறை இருக்கும்போது அவற்றை நயன்தாரா பின்பற்றினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருமணம் முடிந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிகிச்சை, சோதனைகள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்ற பிறகே வாடகைத்தாய் முறைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் நயன்தாரா விவகாரத்தில் திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாயிடம் கரு வளர்க்கப்பட்டுள்ளது. அப்பட்டமாக விதிமீறல் செய்துள்ளார் என்பது தெரிகிறது.
இந்த பிரச்சினை சர்ச்சையானதும் இதுபற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது நயன்தாராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் தான் வாடகை தாய் குழந்தை பெற்றுள்ளார். அந்த ஆஸ்பத்திரி, வாடகை தாயின் பெயர் விபரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உடனடியாக சேகரித்தனர்.
அவற்றை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
இதற்கிடையில் நயன்தாரா விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி விவாதிக்க மருத்துவ துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டி.எம்.எஸ்.சில் இன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றனர் அதிகாரிகள்.