நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
- நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
- ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது60). தொழில் அதிபரான இவர் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28).
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தங்களது உறவினர்கள் வீடுகளிலும், அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நேற்று மாலையில் காணாமல் போன ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.