தமிழ்நாடு (Tamil Nadu)

லஞ்ச புகாரில் சிக்கிய நெல்லை போக்குவரத்து கமிஷனர் சஸ்பெண்டு

Published On 2022-07-26 05:05 GMT   |   Update On 2022-07-26 05:05 GMT
  • கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் அவரது வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
  • தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, நடராஜனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

நெல்லை:

தமிழக போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்தவர் நடராஜன். இவரது அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ரூ.35 லட்சம் மற்றும் அவரது வரவு-செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து துணை ஆணையர் நடராஜன் மற்றும்அவரது உதவியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து அந்த மாதத்தில் 19-ந்தேதி நடராஜன் நெல்லை மாவட்ட போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தொடர்ந்து அவர் பணியில் இருக்க முடியாது என்பதை காரணம் காட்டி தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, நடராஜனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளதோடு, முன் அனுமதியின்றி நெல்லையில் இருந்து வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News