தமிழ்நாடு

ஜெயக்குமாரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்

Published On 2024-05-31 03:49 GMT   |   Update On 2024-05-31 03:49 GMT
  • ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார்.
  • வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயக்குமார் உடல் கிடந்த இடம், அவரது தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், பணிப்பெண்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடதப்பட்டுள்ளது.

அவர் கடந்த 4-ந் தேதி பிணமாக மீட்கப்படுவதற்கு முன்பு வரை கடைசியாக 3 நாட்களுக்கு எங்கெல்லாம் சென்றார்? அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்ய வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு, ஜெயக்குமார் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்று கடைசி 2 ஆண்டுகள் அவரது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்கின்றனர். அவரது வங்கி கணக்கிற்கு யாரெல்லாம் பணம் செலுத்தி உள்ளனர்? ஜெயக்குமார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பி உள்ளார்? என்பது குறித்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் மற்றொரு குழுவினர் திசையன்விளை பஜார் பகுதியில் உள்ள விடுதிகளில் கடைசி 2 மாதங்கள் வந்து தங்கி இருந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் ஓரிரு நாட்களில், அவர் கடிதத்தில் எழுதி வைத்திருந்த அவர்களுக்கு சம்மன் அனுப்பவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News