கார்த்திகை மாத அமாவாசை: ராமேசுவரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
- அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
- 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்:
தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக அமாவாசை நாட்களில் தர்பணம் செய்வது சிறப்புக்குரியதாகும்.
அதன்படி இன்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை முதல் கார், பஸ், வேன் மூலம் வருகை தந்ததனர். அமாவாசை நாளான இன்று அதிகாலை திரளான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதன் பின் பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.