என்.ஐ.ஏ. சோதனை: தமிழகத்தில் அரசியல் களத்தை பதட்டமாக்குவது பா.ஜனதா நோக்கம்- திருமாவளவன் குற்றச்சாட்டு
- தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
- வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.
தாம்பரம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. சோதனை நடத்தும் அளவுக்கு தமிழகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாநிலம் அல்ல. சோதனை என்ற பெயரில் தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நுழைந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எஸ்.டி.பி.ஐ.க்கு எதிரான நடவடிக்கை என்பதை விட தமிழ்நாட்டில் அரசியல் களம் பதட்டம் அடைய வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நோக்கமாக உள்ளது. தமிழகத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள்.
அமலாக்கத்துறையை ஏவுகிறார்கள். தற்போது என்.ஐ.ஏ. என்கிறதை புலனாய்வு துறையை அரசியல் தலைவர்கள் இல்லங்களில் நுழைய வைத்து பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். இது கண்டனத்துக்குரியது.
குற்றவாளிகளை தேடுவது சட்டப்படியான நடவடிக்கைதான். ஆனால் வெளிப்படையாக அரசியல் செய்பவர்களை அச்சுறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. 'இந்தியாவின்' பிரதிநிதி விரைவில் மணிப்பூர் செல்ல இருக்கிறோம்.
ஐகோர்ட்டு பதிவாளர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர், காந்தி படங்கள், சிலைகள் மட்டும்தான் நீதிமன்ற வளாகங்களில் இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.
இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்காரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையாக இருக்கிறது.
இந்த சுற்றிக்கையை அல்லது ஆணையை உடனடியாக உயர்நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினர்.