கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.
- 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை டெல்லி சென்றும் முறையிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை டெல்லி மேலிடம் அந்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் நேற்று நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வாயிலில் மகளிர் அணியினர் கருப்பு உடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.
இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது:-
பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களை அழகிரி புறக்கணிக்கிறார். கூட்டங்களுக்கு எல்லோரையும் அழைப்பதில்லை. அவர் 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை. வேலை போன போலீஸ் அதிகாரி ஒருவரை பா.ஜனதாவுக்கு தலைவராக நியமித்துள்ளார்கள்.
அவர் தினம் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.
எனவே புதிய தலைமை வேண்டும் என்று இரண்டு, மூன்று முறை டெல்லி மேலிடத்தில் கூறியிருக்கிறோம். கண்டிப்பாக மாற்றுவோம் என்றார்கள். கடந்த மாதமும் டெல்லியில் புகார் செய்தோம். அப்போதும் மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை மாற்றவில்லை.
புதிய தலைமை தேவை என்பதை பலமுறை மேலிடத்தில் தெரிவித்தாகிவிட்டது. ப.சிதம்பரம், நான், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்றக் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எல்லோருமே சொல்லி வந்துள்ளோம்.
இவரை வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் பாரத்தை வேறு யார் மீதாவது வைத்துவிட்டு வேலை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.