இரும்புக்கரம் கொண்டு சமூக விரோத செயலை ஒடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
- தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது.
- அநீதியும், அதர்மமும் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், தொழில் முனைவோர்களுக்கும் இடையூறு அளித்து வருகின்ற அவலநிலை தொடர்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் தொழில் துவங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டுவது வெகுவாக குறைந்து வருவதுடன், ஏற்கெனவே உள்ளவர்களும் பிற மாநிலங்களை நாடிச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது.
தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகம்தான் இதற்கு எல்லாம் காரணம். நாட்டைப் பற்றி கவலை கொள்ளாமல் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தன்னல அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. அநீதியும், அதர்மமும் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தட்டிக் கேட்க திராணி இல்லாத அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்படாவிட்டால் தமிழகம் சீரழிந்துவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, பூரண மது விலக்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.