முன்பதிவில்லா பெட்டியில் கூரியர் பார்சல்கள் ஏற்றும் அதிகாரிகள்- தேர்தல் ஆணையம் விசாரிக்க கோரி புகார்
- பயணிகள் அனைவரும் முண்டியடித்து இறங்கி வேறு பெட்டியில் இடம் பிடிக்க ஓடினார்கள்.
- பெட்டியில் என்ன பொருட்களை ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை.
சென்னை:
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் புதூர் எஸ்.பி.முத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் கடநத 26-ந்தேதி இரவு 7.30 மணி யளவில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தார்கள். அப்போது ரெயில் இரவு 8.25 மணிக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென 8 மணியளவில் ரெயிலின் கடைசி முன்பதிவில்லா பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரையும் அடுத்த பெட்டியில் ஏறுங்கள். இதில் பார்சல்கள் ஏற்ற வேண்டும் என ரெயில்வே ஊழியர்கள் கூறி உள்ளனர்.
இதனால் பயணிகள் அனைவரும் முண்டியடித்து இறங்கி வேறு பெட்டியில் இடம் பிடிக்க ஓடினார்கள். அதன் பின்னர் அந்தப் பெட்டியில் என்ன பார்சல் கள் ஏற்றப்பட்டது என்று தெரியவில்லை.
லக்கேஜ் ஏற்றுவதற்கு என்று தனி பெட்டி இருந்தும் பயணிகள் பெட்டியில் ரெயில் புறப்படும் போது பயணிகளை இறங்க சொல்லி அந்த பெட்டியில் என்ன பொருட்களை ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் இது போன்ற சம்பவங்களில் பணம் அல்லது போதை பொருள் ரெயிலில் கடத்தப்படுகிறதா என்று சந்தேகம் ஏற்படுகிறது.
எனவே இது குறித்து ரெயில்வே ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு அதில் எஸ்.பி. முத்து கூறி உள்ளார். இதன் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.