ரெயில் அருகில் வந்து விட்டதால் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய முதியவர்
- ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார்.
- முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பின்னர் இந்த ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டது. அப்போது, திருப்பூர் கல்லம்பாளையம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரெயில் அருகில் வருவதைப் பார்த்து உடனடியாக தண்டவாளத்தில் படுத்தார்.
இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார். இருப்பினும், ரெயில் என்ஜின் அந்த முதியவரைத்தாண்டி சென்று நின்றது. அந்த முதியவர் ரெயில் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை பின்னோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர். இதில் அந்த முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் அவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாலையா (வயது 67) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வந்ததால் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார். உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.