தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு ஆபத்தானது- கமல்ஹாசன்

Published On 2024-09-21 09:04 GMT   |   Update On 2024-09-21 09:20 GMT
  • ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தன்னுடைய துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்த தன்னிகரற்ற தமிழ் ஆளுமையாகவும் கடந்த காலத்தை அறிந்து, நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தைக் கணித்துச் செயலாற்றுகிற முன்னோடியான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகிற ஜூன் 25-ந்தேதிக்குள் குறைந்தது 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும். இந்தப் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்தக் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பது.

போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு எங்கள் தலைவர் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றும் உறுதுணையாக நிற்கும்.

சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

மக்கள்தொகையின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு ஆபத்தானது. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல்.

தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை பன்மைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜனநாயகத்தின் காவல் வீரர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பு 25 என்பது சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசையும், தமிழக மக்களையும் பாராட்ட மக்கள் நீதி மய்யம் கடமைப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வழிகாட்டுதலின் படி மக்கள் நீதி மய்யமும், மோகன் பவுண்டேசனும் இணைந்து நடத்திய உடல் உறுப்புகள் தான முகாமில் 1081 பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். பத்தாயிரம் பேர் என்ற இலக்குடன் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News