தமிழ்நாடு

பழனி தேவஸ்தானத்தை கண்டித்து நகர்மன்ற தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் போராட்டம்

Published On 2024-07-05 06:48 GMT   |   Update On 2024-07-05 06:48 GMT
  • அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
  • நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அதில் தடுப்புகள் ஊன்றப்பட்டு வாகனங்கள் வர முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சன்னதி வீதி, அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

சாலையோர கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டதால் தங்களுக்கு வருவாய் குறைந்து விட்டது. கிரி வீதி வழியாக வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் அதன் முலம் கிடைக்கும் வருவாயும் நின்று விட்டது என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக தெரிவித்தனர்.

தேவஸ்தான நிர்வாகம் நேரடியாக நகராட்சி உரிமைகளில் தலையிடுவதால் அதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தேவஸ்தான அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

மேலும் நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் தேவதஸ்தானம் செயல்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவில் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News