தென் மாவட்டங்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் தவித்த பயணிகள்
- அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
- நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர்.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில், தனியார் பஸ்களில் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் முடிந்துவிட்டதால் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து இப்போது ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
முன்பதிவு இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் பயணிகள் பலர் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர்.
ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் முன்பதிவு இல்லாத பஸ்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் தவித்தனர். இதுபற்றி அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டார் திடீரென 5 மற்றும் 6-வது பிளாட்பாரத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் அங்கு முன்பதிவு செய்த பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த பஸ்சை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போக்கு வரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டது குறித்து கேட்டு அவர்களிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் நள்ளிரவு 1மணி அளவில் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்று சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகிறோம்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்ய தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அனைத்து பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.