தமிழ்நாடு

விக்கிரவாண்டி அருகே புதுவை சாராயம் குடித்த மேலும் 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2024-07-10 08:51 GMT   |   Update On 2024-07-10 08:51 GMT
  • சாராயம் குடித்த 6 பேருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
  • கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வேம்பி மதுராபூரிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்தார். அதே ஊரை சேர்ந்த ராஜா (37), சுரேஷ்பாபு (36), பிரகாஷ் (38), காளிங்கராஜ் (47), பிரபு (35) ஆகியோருடன் சேர்ந்து சாராயத்தை குடித்துவிடடு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் சாராயம் குடித்த 6 பேருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இவர்களை அவரது குடும்பத்தார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் அருந்திய சாராயம், புதுவை-விழுப்புரம் எல்லையோர கிராமமான மதகடிப்பட்டில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த மேலும் 5 பேர் புதுவை மாநில சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் சாராய கடைகளுக்கான ஏலம் கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது. இதில் ஏலம் போன் கடைகளில் மட்டுமே சாராய விற்பனை நடைபெறுகிறது. மற்ற காடைகளில் சாராயம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் எல்லையோரங்களில் சாராயம் மற்றும் மதுபான கடைகள் நடத்துவதற்கும் தடை விதித்து புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் இருந்து பாக்கெட் சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்தது யார்? இது கள்ளச்சாராயமா? மெத்தனால் கலந்த சாராயமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் புதுவை மாநில சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News