பொதுமக்கள் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்- சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை
- தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன.
- தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் தற்போது வாந்தி, பேதியால் மருத்துவ மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படுவதாலும் வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதியை தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஜிங்க் மாத்திரை ஆகியவை முகாம்களிலும், வீடுவீடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாந்தி, பேதி ஏற்படாமல் தங்களை பாதுகாக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை குடிநீரால் ஏற்படும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.